சென்னை: சென்னையில்,  மாற்றுத்திறநாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறநாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.  அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படவதுடன், மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியோர், தசைச்சதவு நோய், தொழுநோய், முதுகு தண்டுவடம் பாதிப்பு, நரம்பியல் நோய், பார்வை குறைபாடு, கருச்சிதைவு உள்ளிட்டவற்றிற்கு பராமரிப்பு உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும்,  மாற்றுத்திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் வகையில், அவர்களை  ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது.

 இதன் தொடர்ச்சியாக இன்று  சோழிங்கநல்லூர்-கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு உதவிகளை வழங்கியதுடன், இம்மைய வளாகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆவின் பாலகம் நடத்துவதற்கான ஆணையினை வழங்கினார்.

பின்னர், அங்கு மறுவாழ்வு சேவை பெற வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன்  முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.