சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 9ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடிய நிலையில் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்,  மீண்டும் டிசம்பரில் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநயாகர் அப்பாவு,  டிசம்பர்  9-ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது.  கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து,  அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை கூட்டி  முடிவெடுப்போம் என்றார்.

சட்டசபை நடத்தும் நாட்கள் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடப்பாண்டு தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

தொடர்ந்து, பிப்.19-ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இரு பட்ஜெட்கள் மீதும் 22-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதன்பின், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, மானிய கோரிக்கைகள் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், தேர்தல் முடிவடைந்ததும்,  துறைகள்தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.  அதன்படி  டிசம்பர் 9ந்தேதி பேரவை கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.