டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்ததுடன், “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக போக்கிரித்தனத்தை நாடுகிறார்கள் என விமர்சித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை 11.30 மணி அளவில் கூட்டத்தொடர் வழக்கமான நடைமுறைகளின்படி தொடங்கியது. முன்னதாக இந்த கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் கார்கா அறையில் அமர்ந்து விவாதித்தனர். இதற்கிடையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியார்களிடம் பேசிய பிரதமர் மோடி, நடப்பாண்டின் கடைசி கூட்டத்தொடர் இது. ஆக்கப்பூர்வமான நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக காத்திருக்கிறேன். நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை.
எம்.பி.க்கள. தங்கள் தொகுதி பயனடையும் வகையில் கூட்டத்தொடரை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. அனைவரும் நாடாளுமன்ற கண்ணியத்தை காக்க வேண்டும். அவைகளில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 75ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கூட்டத்தொடர் நடப்பது சிறப்பு. நாளை 75வது அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.
பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மக்கள் நம்மை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். விவாதத்தில் அதிகமான எம்பிக்கள் பங்கேற்க வேண்டும்.
பார்லிமென்டின் பாரம்பரியம், கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டத்தொடரை சமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆக்கபூர்வமான பார்லிமென்ட் கூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.
பார்லிமென்டில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பேசியதில்லை. அதிகார பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். பா ர்லிமென்ட் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுகின்றனர்.
கூட்டத்தொடருக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதானி மீதான அமெரிக்காவின் புகார் உள்ளிட்ட கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.