டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள், காங்கிரஸ் எம்.பி. யும் கட்சி தலைவருமான கார்கே அறையில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், திமுக உள்பட பல கட்சி எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று ( நவம்பர் 25ந்தேதி – திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் வக்பு மசோதா, மணிப்பூர் விவகாரம், காற்று மாசு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி அவையை முடக்க திட்டமிட்டு உள்ளன.
இதுதொடர்பாக மக்களை தலைவர் கார்கே அணையில் இன்று காலை இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதில் அவையில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது.