டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி உள்ள நிலையில்,  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில், அதானி விவகாரம், டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்க வலியுறுத்தி    நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்தக் கோரி மக்களவை உறுப்பினர்கள் கே.சி.வேணு கோபால், மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும்,  காற்று மாசுபாடு குறித்து குறுகிய கால விவாதத்தை நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன்,  வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸும் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர். மேலும் மணிப்பூர் விவகாரமும் இந்த கூட்டத்தொடரில் எழுப்பப்பட உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று ( நவம்பர் 25ந்தேதி – திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

மேலும்,  ஐந்து மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகம் செய்து நிறைவேற்ற பட்டியலிடப்பட்டுள்ளன. ஐந்து புதிய மசோதாக்களில் வணிகக் கப்பல் மசோதா, கடலோரக் கப்பல் மசோதா, இந்திய துறைமுக மசோதா, பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா உள்ளிட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று ( நவம்பர் 24ந்தேதி) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம் கூட்டத்தில் பேசிய, காங்கிரஸின் கௌரவ் கோகோய், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இன்று அவை தொடங்குவதற்கு முன்பே,   அதானி விவகாரத்தை விசாரிக்க கோரி காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர். அதுபோல டெல்லி காற்று மாசு, வயநாடு நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

y நாட்டில் 2020 – 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள  தமிழ்நாடு, ஆந்திரா உள்பட சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.