சென்னை: அதிக தூரம் கொண்ட  சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில்,   கடற்கரை  கலங்கரை விளக்கம்  டூ  பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு அஸ்திவாரத் தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும் இதுதான் மீண்ட நீண்ட தூரம் கொண்ட வழித்தடமாக கூறப்படுகிறது.

இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த  நிலையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் – போரூர் சந்திப்பு நிலையத்துக்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் அஸ்திவாரத் தூண்கள் அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தநிலையில், அவை  100 சதவீதம் நிறைவடைந்துள்ளன என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து  கூறிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்,  இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. தொலைவுக்கு 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழ் 2,255 அஸ்திவாரத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சவாலான இந்த பணிகள் நிறைவடைந்ததன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.