சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங் களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையைத்தொடர்ந்து, உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியல், திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 10 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர், 2017 மே மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த புகாரைத் தொடர்ந்து, அப்போதைய முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார், முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன், தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 120(பி) (குற்றச் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றி நேர்மையின்றி பொருளைப் பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்), 467 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்), ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் (அரசு ஊழியர் சட்டவிரோதமாகப் பணம் பெறுதல்), 13(1) (சி), (13(1)(டி), 13(2) ஆகிய பிரிவுகளில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிவு செய்தார்.
இதுதொடர்பான விசாரணை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர்கள் 21 பேரில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லை. பலர் முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படவில்லை. மேலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. நேர்முகத் தேர்வில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு அதிகப்படியான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற முயற்சி நடந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய துணைவேந்தராக திருவள்ளுவன் நியமிக்கப்பட்டிருந் தார். அவரிடம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார்.