சென்னை: தமிழ்நாட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றபிறகு, கடந்த 3ஆண்டுகளில் 6ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் அரங்கேறி உள்ளன என எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிப்பாக சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு கடும் கண்டனம் – ஈபிஎஸ்
  • தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ் 
  • முதல்வர் ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்; அண்ணாமலை 
  • தமிழக ஆட்சியில் கத்திக்குத்துகளுக்கு நடவடிக்கையே இல்லை  – தமிழிசை சவுந்தரராஜன்
  • தமிழகத்தில் அதளபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு – டிடிவி தினகரன்
  • திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே  மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி- சீமான்
  • தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – சசிகலா

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காலையில் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை வகுப்பறைக்குள்  கத்தியால் குத்தி  கொலை செய்யப்பட்ட நிலையில், மதியவேளையில், ஓசூர் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, மாலையில் டீனேஜ் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி, கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களும் திமுக அரசையும், தமிழ்நாடு காவல்துறையையும்  கடுமையாக சாடியுள்ளனர்.

நடிகை கஸ்தூரியை கைது செய்ய ஆர்வம் காட்டி காவல்துறை, உடன்குடி அருகே பள்ளி மாணவிகளக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகத்தினர் மீது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட  யுடியூபர் இர்பான் மீது எடுக்கப்படவில்லையே ஏன் என கேள்வி எழுப்பி  வருகின்றனர்.

காவல்துறையினர், ஆட்சியாளர்களின் அடிமைகளாக செயல்பட்டு வருவதாக விமர்சித்து வரும் சமூக ஆர்வலர்கள், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில், 10 சதவிகிதமாக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் காவல்துறை அக்கறை கொண்டாலே, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்பட போதை பொருள் நடமாட்டம், சாதிய வன்முறை, பாலியல் தொல்லைகள் போன்றவை முடிவுக்கு வந்துவிடும் என தங்களது மனக்குமுறலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களிடையே இலவசத்தை காண்பித்து, மாநிலத்தில் நடைபெறும் அவலங்களை மறைத்து ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினும், மாநில அரசும், காவல்துறையும் மக்களை நலனில் அக்கறை காட்டாமல் இருப்பது, நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.   ஆட்சியாளர்களின் ஆசையை மட்டுமே நிறைவேற்றுவதில்  காவல்துறை செயலாற்றி வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி:

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை

தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தஞ்சையில் பள்ளி ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்; ஓசூரில் வக்கீல் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தி.மு.க., அரசு நிர்வாகத்தின் மிக மோசமான சட்டம் ஒழுங்கு நிலையை எதிரொலிக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும். இது போன்ற விவகாரங்களை திசைதிருப்புவதற்கு பதிலாக, சிறிது நடவடிக்கை எடுத்திருந்தால், இது மாதிரியான சம்பவங்களை தடுத்திருக்கலாம். இதுபோன்ற சட்ட ஒழுங்கு மீறல்களை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழநாடு மாநில பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான, தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைக்குள் கத்திக்குத்து….

நீதிமன்ற வளாகத்திற்குள் கத்திக்குத்து..

இன்று தமிழக ஆட்சியில்

கருத்து குத்துகளுக்கு உடனே நடவடிக்கை

கத்திக்குத்துகளுக்கு இல்லை நடவடிக்கை

இதுவே இன்றைய தமிழக அரசின் வாடிக்கை..

இதை திராவிட மாடல் என்று சொல்வது வேடிக்கை..

சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பாருங்கள் என்பது..

மக்களின் கோரிக்கை..

இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன.

அவரது எக்ஸ்தள  பதிவில்,  அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறி ஞருக்கு வெட்டு – தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதையும் படியுங்கள்: தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே தஞ்சாவூருக்கு அருகில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை.

மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். மக்களிடமிருந்தும், தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் முதலமைச்சர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதலமைச்சர் செல்லவில்லை.

காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று உயர்நீதிமன்றம் இன்று வினா எழுப்பியுள்ளது.

நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது. காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும்.

ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாடியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் வழக்கறிஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கிவரும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளாகவே வழக்கறிஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தும் அளவிற்கு சட்டம் – ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் சுவடுகள் மறைவதற்கு முன்பாகவே ஒசூரில் வழக்கறிஞர் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதல் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி அவர்கள் பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மனதைக் கொதிக்கச் செய்கிறது.

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு மக்களுக்குள்ளும் எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை திமுக அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூர கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா?

ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் யாவும் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே உணர்த்துகிறது என சாடியுள்ளார்.

 சசிகலா 

தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப் படாததால், யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இவ்வாறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாநிலத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள இளம் வயதினர் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். எனவே, திமுக தலைமையிலான அரசு கொஞ்சமாவது தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பறையில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்! எங்கே செல்கிறது இளைய தலைமுறை..?

முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது..! இது தமிழ்நாட்டின் அவலம்…