கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சீன நாட்டைச் சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர்.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலி மூலம் கடன் வாங்கும் நபர்கள், மோசடி நபர்களிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகிறது.
இதுபோன்ற செயலி மூலம் கடன் வழங்கி அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் சீன நாட்டைச் சேர்ந்த சியாவோயா மாவோ, வூயூயாலூன ஆகிய இருவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர்.
விசாரணையில், இந்தியர்கள் சிலரை போலி இயக்குநர்களாக நியமித்து 2 நிறுவனங்களை இவர்கள் நடத்தி வந்ததும், அதன்மூலம் கடன் செயலி வழியாக பலருக்கு கடன் கொடுத்துள்ளதும் அவர்களை மிரட்டி 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி வசூலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குறைந்த நாட்களுக்கு அதிக வட்டி வசூலித்து மிரட்டலில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்த 2 சீனர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் இவர்கள் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் வட்டிக்கு கொடுக்கப்படும் பணம் யாருடையது என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.