தஞ்சை: தஞ்சாவூரில்  உள்ள அரசு பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை இளைஞர் ஒருவரால்  குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர் அருகே உள்ள   மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பறைக்குள் நுழைந்த மதன் என்ற இளைஞர்,  தான் கொண்டு வந்த கத்தியால்,  ஆசிரியையின்  கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து சரிந்த ஆசிரியரை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால்,   மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  அநத  பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த மதனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில்,  ஆசிரியை பெயர் ரமணி என்பதும், அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான்,  மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக  சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

ஆசிரியை ரமணியை,   சின்னமனை பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  ஆனால், காதலில் ரமணிக்கு விருப்பம் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் மதன் தனது பெற்றோருடன் சேர்ந்தது,  ரமணியை  பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால், ரமணி திருமணம் செய்ய விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனால்  கடும் ஆத்திரத்தில் இருந்த மதன், இன்று காலை கத்தி எடுத்துக் கொண்டு மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில்  ஆசிரியை ரமணி மாணவர்களுக்கு  பாடம் நடத்திக் கொண்டிருந்ததை கண்டதும், அவர் அருகே சென்ற மதன், திடீரென தான்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்திலேயே குத்தியுள்ளார்.

இதனை பார்த்த மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ஒலமிட்டனர். இதனால் மதன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.  இந்த சத்தம் கேட்டு  அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  இணைந்து, ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் ஆசிரியை ரமணி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல்துறையினர், கொலை வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்த மதனை கைது செய்தனர். விசாரணையில், தன்னை  திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில்  ஆசிரியை ரமணியை குத்திக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும்  உரிய விசாரணை நடத்த  கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளியில் ஆசிரியையை குத்திக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை திருமண விவகாரத்துக்காக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.