சென்னை மெரினா லூப் சாலையின் தெற்கு பகுதியில் உணவு வளாகம் மற்றும் மீன் சந்தை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஏற்கனவே கருத்து தெரிவித்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் இதுகுறித்த பேச்சு தீவிரமாக எழுந்துள்ளது.

லூப் சாலையில் நொச்சிக்குப்பம் அருகே தற்போது புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடி கடந்த மாதம் முதல் செயல்பட துவங்கியுள்ளது.

இருந்தபோதும், பட்டினப்பாக்கம் மற்றும் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் இந்த வளாகத்திற்குள் செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கவுன்சில் கூட்டத்தில் வார்டு உறுப்பினர் கூறிய கருத்துகளை முன்வைத்து லூப் சாலையின் தெற்கு பகுதியில் மற்றொரு வளாகம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

லூப் சாலையில் மீன் கடைகளை தவிர, உணவகங்களும் உள்ளதால் உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்கலால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

இதையடுத்து பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே லூப் சாலையில் உள்ள அரசு நிலத்தில் உணவகம் மற்றும் மீன் சந்தை வளாகம் அமைப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த யோசனையை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொண்டதாக இந்தப் பகுதி மக்கள் கூறிவரும் நிலையில், இதுகுறித்து மாநகராட்சி விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.