சென்னை

முன்னாள் அமைசர் தலித் எழில்மலையின் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்னும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

பிரபல வழக்கறிஞர் காமராஜ் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு இடத்தகராறு காரணமாக சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டராங்கும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

சென்னை கொரட்டூர் காவல்துறையினர் வழக்கறிஞர் காமராஜ் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2015 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இன்று மேற்கண்ட வழக்கில் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் வழங்கிய தீர்ப்பில் கல்பனாவிற்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், ஆனந்தன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கி உள்ளார்.