சென்னை
எல் ஐ சி நிறுவன வலைத்தளம் இந்தியில் மொழி மாற்றம் செய்யபட்டுள்ளதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் வலைதளப் பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அதன் இணையதள வலைதளப் பக்கம் முழுக்க இந்தி மொழியில் மாற்றம் செய்யப்பட்டு இயங்கியது. இதன் மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும், ஹிந்தி மொழியில் இருந்ததால்மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது.
இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு, மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. எல்ஐசி யின் இணையதள முகப்புப் பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,
”இந்தி திணிப்பின் பிரச்சார கருவியாக எல் ஐ சி இணையதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை தேர்வு செய்யும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது கலாச்சாரமும், மொழியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.
அனைத்து இந்தியர்களின் பங்களிப்புடன் வளர்ந்த எல் ஐ சி, எந்த தைரியத்தில் இப்படி பெரும்பான்மை இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை திரும்ப பெற வேண்டும்”
எனப் பதிவிட்டுள்ளார்.