சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளதாகவும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 1% கூடுதலாக பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற நவ. 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாள்களில் வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 7 நாள்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நவ. 25 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.