சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகர போக்குவரத்தை திறம்பட மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக அண்ணாசாலையில் முத்துசாமி பாலம் முதல் கத்திபாரா சந்திப்பு வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல் கடைபிடிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு பல இடங்களில் யூ-டர்ன் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த யூ-டர்ன் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.

இந்த மாற்றம் சென்னையில் கடந்த பல மாதங்களாக நடைமுறையில் உள்ள நிலையில் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் காவல்துறை எதிர்பார்த்த பலன் கிடைத்ததாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் இருக்கும் பேருந்து நிறுத்தங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக முக்கிய சாலை சந்திப்புகள், சிக்னல்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்கள் அருகில் பேருந்து நிலையங்கள் இருப்பதால் அந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிக்னல்கள், மேம்பாலங்கள் போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் இருந்து பேருந்து நிறுத்தத்தை 100 மீட்டர் தூரம் தள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பாரிமுனை-முகப்பேர், வடபழனி-தரமணி வழித்தடங்களில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் பின்னர் சென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.