சென்னை: இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார். அவருடன் 22 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுள்ளது. ஹரிணி, இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஹிந்து கல்லூரியில் உயர்கல்வி படித்தவர் என்பது பெருமைக்குரியது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், இதுவரை ஆண்ட கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு, ஜனதா விமுக்தி பெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயகநாட்டின் அதிபராக பதவியேற்றார். இதையடுத்து, அப்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து தற்காலிக பிரதமராக ஹரிணியை அதிபர் நியமனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து இலங்கை நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற பதவிக் காலம் இன்னும் 11 மாதங்கள் இருந்தபோதும், அவையைக் கலைத்து அதிபர் உத்தரவிட்ட நிலையில், அக்டோபர் முதல்வாரத்தில் நாடு முழுவதும் நாடாளுமனற் தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. இதிலும் அதிபரின் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையிம் பதவி ஏற்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
22 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையானது அனுபவமிக்க அரசியல்வாதிகள் மற்றும் புதிய திறமையாளர்களின் கலவையை உள்ளடக்கியது, தேசத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையை பட்டியலிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராகத் தொடர்வதோடு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சையும் அவர் மேற்பார்வையிடுவார். அவரது இரட்டைப் பாத்திரம், கல்வியை சீர்திருத்துவதில் நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கான தொழில் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.
அதேபோன்று, விஜித ஹேரத் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக தொடர்கிறார். மற்ற முக்கிய நியமனங்களில் பிமல் ரத்நாயக்கவுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு சுகாதாரம் மற்றும் ஊடகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவர்களைத் தவிர, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார, கே.டி.லால்காந்த, ஆனந்த விஜேபால, இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் அடங்குவர்.
அனுபவத்தின் அடிப்படையில் அமைச்சரவை தெரிவு செய்யப்பட்டு அமைச்சுப் பங்கீடுகளில் விஞ்ஞான முறை பின்பற்றப்படும் என NPPயின் ஊடக பேச்சாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவாகி உள்ளார். ஏற்கனவே, . 1994-ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக பதவியேற்றதற்குப் பிறகு, இலங்கை பிரதமராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். இலங்கை பிரதமராக பதவியேற்ற முதல் கல்வியாளர் என்ற பெருமையும் ஹரிணிக்கு சொந்தமாகும்.
ஹரிணி அமரசூரிய டெல்லியில் உள்ள ஹிந்து கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். இவர், 1991 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில் ஹிந்து கல்லூரியில் சமூகவியல் துறையில் பயின்று பட்டம் பெற்றுள்ளார் ஹரிணி அமரசூரிய. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் மானுடவியல் படிப்பு மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டமும் ஹரிணி பெற்றுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள ஹரிணி, இளைஞர்கள், அரசியல், பாலினம், வளர்ச்சி, குழந்தைகள் பாதுகாப்பு, உலகமயமாக்கல் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் செய்ததுடன் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.