சென்னை: வடசென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க அந்த பகுதிகளில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
.
வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு அதிக நாட்களாவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனபே பல ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டும், அது எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது. இந்த நீரை பல நீர்இறைப்பு மோட்டார்கள் மூலம் இரவு பகலாக வெளியேற்றி வருகிறது மாநகராட்சி.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மழைநீரை சேமிக்கும் வகையில், மாநகராட்சி பூங்காக்கள், மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த மழைநீர் பல சிறு குளங்களில் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் மழைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டதால், அந்த பகுதிகள் மற்றும் அதன் க சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டது, மேலும்,குறிப்பிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், மேலும் வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள 35 குளங்களை சென்னை மாநகராட்சி புனரமைத்து மழை வெள்ளத்தைத் தடுக்கவும், நீர் சேமிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடசென்னை பகுதியில் உள்ள சடையங்குப்பம், மணலியில் உள்ள கார்கில் நகர், மாதவரத்தில் உள்ள வடபெரும்பாக்கம் போன்ற இந்தப் பகுதிகள் மழை காலத்தில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளில் உள்ள 35 குளங்களும் 20 அடி ஆழப்படுத்தப்பட்டு, குறைந்தபட்சம் 50 மில்லியன் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல் படவேட்டம்மன் கோயில் குளத்தில் நடைபாதை வசதிகள் மற்றும் மாதவரத்தில் 139 ஏக்கர் ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றுவது ஆகியவை அடங்கும்.
இதேபோல், மாதவரத்தில் ரூ. 4 கோடி செலவிலும், 400 ஏக்கர் பரப்பளவுள்ள ரெட்டேரி ஏரி ரூ. 43 கோடி செலவிலும் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள், டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.