சென்னை
நெல்லை – சென்னை இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் வழங்கபட்ட உணவில் வண்டு இறந்த நிலையில் இருந்துள்ளது.
வந்தே பாரத் ரயில் இந்திய ரயில்வேயின் ஒரு மைல் கல்லாக அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயில் மறு மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும்.
நேற்று காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட சாம்பாரில், வண்டு இறந்து கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் முறையின்ன நிலையில், அது சீரகம் என கூறியுள்ளனர்.
அது வண்டுதான் என நிரூபித்ததை தொடர்ந்து, பயணிகளை ஊழியர்கள் சமரசம் செய்துள்ளனர். சாப்பாட்டில் வண்டு கிடந்தது குறித்து பயணிகள் ஆதங்கத்தோடு பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில்
“வந்தே பாரத் ரயில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.அதில் கொடுக்கப்படும் உணவு பயனுள்ளதாக இல்லை. கிட்டத்தட்ட 200 ரூபாய் உணவுக்காக மட்டும் கட்டணத்தில் வசூலிக்கின்றனர். தரமான உணவை வழங்க வேண்டும்”
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
வந்தே பாரத் ரயில் சேவை அதிக கட்டணம் என்றாலும் விரைவான சேவை என்பதால் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் உணவில் வண்டு கிடந்ததாக எழுந்துள்ள புகார் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.