கோவை: ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பையும், அதிர்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், நீர் நிலைகள், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நத்தம் நிலகள் போன்றவை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் போலி பட்டா போட்டு விற்பனைகள் செய்யப்பட்டுள்ளதும், இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், அவை மீட்கப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், கோவையில் தனியாருக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயருக்கு மாற்றிய முபாரக் அலி, நிஷார் அகமது மற்றும் அவர்களுக்கு உதவிய பாக்கியம், சாந்தி, கௌதமன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது அண்ணனுடன் சேர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு குறிச்சி பகுதியில் நிலம் வாங்கினார். பின்னர் அதில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தை இரண்டு பேரும் சேர்ந்து கவனித்து வந்தனர்.
இந்த நிலையில்,கடந்த ஆண்டு வேணுகோபால் நிறுவனத்தில் இருந்த போது கோவையைச் சேர்ந்த முபாரக் அலி வந்து, தான் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதாகவும், இந்த இடத்தை தான் வாங்கி இருப்பதால் உடனடியாக நீங்கள் காலி செய்ய வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் உடனே தனது தம்பி விஜயகுமாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு வந்து அவரின் பெயரில் அந்த இடம் இருப்பதற்கான ஆவணங்களை காட்டிய, பின்னர் முபாரக் அலி அங்கு இருந்து சென்று விட்டார்.
பின்னர் சில நாள்கள் கழித்து விஜயகுமாருக்கு செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மிரட்டிய முபாரக் அலி, அந்த இடம் தங்களுக்கே சொந்தமானது என்றும், உங்களுக்கு தேவையானார், தற்போதைய மார்க்கெட் விலை எவ்வளவோ அதை நீங்கள் என்னிடம் கொடுத்தால் அந்த இடத்தை உங்களுக்கே கிரயம் செய்து கொடுப்பதாக மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது 2022 ஆம் ஆண்டு பாக்கியம் என்பவரிடம் முபாரக் அலி அந்த இடத்தை வாங்கி இருப்பதாக இருந்தது.
தன்னுடைய நிலம் வேறு ஒரு நபரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் முபாரக் அலி, பாக்கியம், சாந்தி, கௌதமன், நிஷார் அகமது ஆகியோர் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு போலி ஆவணங்களை தயாரித்து விஜயகுமாரின் நிலத்தை முபாரக் அலிக்கு விற்பனை செய்ததாக பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். இதையடுத்து மோசடி செய்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் முபாரக் அலிக்கு உதவி வழக்கறிஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் கோவையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.றனர்.