சென்னை: கார்த்திகை மாத சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (நவம்பர் 15ந்தேதி) மாலை திறக்கப்பட்டுள்ளது. காா்த்திகை 1-ஆம் தேதியான சனிக்கிழமை (நவ. 16) மண்டல காலம் தொடங்குவதால் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்திகள் பூஜைகளை தொடங்கினர். தொடா்ந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், சந்தன அபிஷேகம், உச்சபூஜை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
தினமும் பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படும். தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்குப் பிறகு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். தினசரி 18மணி நேரம் நடை திறந்திருக்கும் என தேவசம் போர்டு தெரிவித்துஉள்ளது.
இந்த மண்டல பூஜை முடிந்து டிச. 26-ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு டிச. 30-ஆம் தேதி நடை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். ஜன. 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது அதையொட்டி திறக்கப்படும் கோவில் நடை 2025ம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
அதாவது, மண்டல பூஜைக்காக கோவில் நடை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரை திறந்திருக்கும். இதையொட்டி, தமிழக பக்தர்கள் கோவில்களில் மாலை அணிந்து விரதங்களை தொடங்கி உள்ளனர். இன்று முதல் நாளிலேயே பக்தா்கள் பெருமளவில் குவிந்துள்ளனா்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சபரிமலைக்கும் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து அறநிலையத் துறை சார்பில் 24மணிநேர சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கிய 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரையும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999, 1800 425 1757 ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.