கன்னட நடிகர் தர்ஷனின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஆட்டோ டிரைவரான ரேணுகாசாமி, கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி பெங்களூரில் உள்ள மேம்பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நடிகர் தர்ஷனின் ரசிகரான ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் காதலியும் நடிகையுமான பார்வதி கௌடா குறித்து சமூகவலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷன் கூலிப்படையினரை ஏவி ரேணுகாசாமியை கொடூரமான முறையில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கின் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காவல்துறை தரப்பில் அம்மாநில உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.
இதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.