சென்னை: எலி தொல்லையை கட்டுப்படுத்த வீட்டை சுற்றியும், வீட்டின் ன் சில பகுதிகளிலும் எலி மருந்து வைத்த நிலையில், அன்று இரவு வீட்டின் ஏசியை இயக்கி தூங்கிய தம்பதியினரின் இரு குழந்தைகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக எலிமருந்து அடித்த தனியார் நிறுவன நிர்வாகி உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை குன்றத்தூரில் குடும்பத்தோடு வசித்து வருபவர் கிரிதரன். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால், அதை ஒழிக்க தனியார் நிறுவனத்தின் மூலம் வீட்டை சுற்றி மட்டுமின்றி வீட்டின் பல பகுதிகளிலும் எலி மருந்து வைத்துள்ளார். இதனால், மருந்தின் நெடி ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் அன்று கிரிதரன் மற்றும் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன், அதே வீட்டில் உள்ள ஏசி அறையில் ஏசியை போட்டுக்கொண்டு துங்கி உள்ளனர்.
ஏசி வழியாக வெளியே இருந்து விஷ காற்று அறைக்குள் பரவிய நிலையில், அதை சுவாசித்த இரு குழந்தைகளும் அலறியுள்ளனர். அதுபோல கிரிதரன் அவரது மனைவி பவித்ராவும் மூச்சு விட சிரமப்பட்டுஉள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே குடியிருந்தவர்கள் நால்வரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அக்கம், பக்கத்தினர் அனுமதித்த நிலையில் அவர்களில் 6 வயது மகள் வைஷ்ணவி மற்றும் 1 வயது மகன் சாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிரிதரனும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைத்ததால் ஏற்பட்ட விஷவாயுவினாலே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தவிர நிறுவனத்தின் நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலியை கட்டுப்படுத்த வீட்டில் வைத்த எலி மருந்து 2 குழந்தைகளின் உயிரை பறித்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.