உத்தர பிரதேச மாநில அரசு தேர்வாணையம் அறிவித்துள்ள தேர்வு முறைக்கு எதிராக அம்மாநில மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.

ஆய்வு அலுவலர் மற்றும் உதவி ஆய்வு அலுவலர் (Review Officer and Assistant Review Officer – RO/ARO) பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தவிர, மாகாண குடிமைப் பணிக்ளுக்கான (Provincial Civil Services – PCS) தேர்வும் நடைபெற உள்ளது.

PCS முதன்மை தேர்வு டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் RO/ARO தேர்வுகள் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களும் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் SSC / UPSC தேர்வு மட்டுமன்றி மாநில அரசின் UPPSC தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தனித்தனியாக பிரித்து வெவ்வேறு நாளில் வெவ்வேறு நேரத்தில் தேர்வு எழுதச் செய்வது பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அதனால் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து லக்னோ-வில் உள்ள UPPSC தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் தேர்வு தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களுடன் UPPSC செயலாளர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் PCS தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், RO-ARO தேர்வு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள் PCS தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த அறிவித்ததுபோல் RO-ARO தேர்வையும் ஒரே ஷிப்டில் நடத்த அறிவிப்பு வெளிவரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

PCS தேர்வை விட RO-ARO தேர்வுக்கு அதிக எண்னிக்கையிலானவர்கள் விண்ணப்பித்துள்ளதை அடுத்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RO-ARO தேர்வுக்கான தேர்வு மையங்களை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி அதிக எண்ணிக்கையிலான கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வு நடத்த வகை செய்யவேண்டும் என்று மாணவர்கள் போராடி வருகின்றனர்.