சென்னை: பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கொண்டு உரிய நடவடிக்கைக்கு உத்தர விடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாரை அழைத்துக்கொண்டு 4 பேர் வந்துள்ளனர். அப்போது, சிகிச்சை தொடர்பாக, புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜிக்கும், நோயாளியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது, திடீரென நோயாளியின் உறவினர்கள், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.“கத்தியால் குத்திய நபர் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது” “தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தவறாக புரிந்துகொண்டு கத்தியால் குத்தியுள்ளார்” “மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள்.” என்று கூறினார்.