சென்னை: சென்னையில் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கத்திக்குத்தால் பலத்த காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைத் துறையின் பேராசிரியர் பாலாஜியை, நோயாளியைப் பார்க்க வந்த நபர், கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்தால் ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் குத்தியவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, நோயாளியைப் பார்க்க வந்த ஒருவர் மருத்துவரை கத்தியால் குத்தியதாகவும், தற்போது கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருவதாகவும், மருத்துவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நோயாளிகளை தவிர மற்றவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் சிகிச்சைக்கா வந்திருந்த நோயாளிகளின் உறவினர்களுக்கும், மருத்துவர் பாலாஜிகும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி 4 பேர் மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தீவிரமடைந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர்களை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்
. மருத்துவமனைக்கு வந்திருந்த இவர்கள் யார்? மருத்துவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு, இதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.