அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக கிரிஸ்டி நோயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுப்பது ஒன்றே லட்சியம் என்று டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழங்கி வரும் அதேவேளையில் 2025 ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு தலைமையேற்க உள்ளவர்களின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வடக்கு, தெற்கு, கடல் மற்றும் வான் என அமெரிக்காவின் எல்லைகளைக் காப்பதுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவியுள்ளவர்களை வெளியேற்றும் எல்லை காவல் பொறுப்பை ‘எல்லச் சாமி’ டாம் ஹோமனிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர் ஏற்கனவே அமெரிக்காவின் குடியுரிமை செயலராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 3வது முறையாக போட்டியிட்டு இரண்டாவது முறையாக தேர்வான அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் என்ற பெருமையுடன் ஜனவரி 20ம் தேதி பதவியேற்கவுள்ள டிரம்ப் 2020ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின் அமெரிக்காவிலும் வெள்ளை மாளிகையில் அரங்கேற்றிய நிகழ்வுகளை மழுங்கடிக்க அவரது ஆதரவாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் அவரது வல்லமையை பறைசாற்றி வருகின்றனர்.
அதேவேளையில், தனது நிர்வாகத்தின் கீழ் செயல்பட உள்ளவர்களின் தேர்வில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதற்காக புளோரிடா-வில் உள்ள டிரம்ப்-பின் தனிப்பட்ட கிளப்பான மர்-அ-லகோ-வில் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.
நியூயார்க்-கில் உள்ள டிரம்ப் டவரில் இயங்கி வரும் தேர்வு குழுவில் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இடம்பெற்றுள்ளார் இருந்தபோதும் டிரம்ப் குறித்து எந்த ஒரு கணிப்பும் செய்யமுடியாத நிலையில் உள்ள இவர்கள் ஒவ்வொரு பதவிக்கும் இரண்டு அல்லது மூன்று பேரை தேர்வு செய்து அவர்களை டிரம்ப்பிடம் அனுப்பி வைக்கின்றனர்.
அதற்கு முன்பாக அவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் இதற்கு முன் அவர்கள் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களது கொள்கைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
தனது தந்தையின் கொள்கைக்கு முரணாக உள்ள எந்த ஒரு நபரும் அவரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஜூனியர் டிரம்ப் முன்னாள் செயலர்கள் போம்பியோ உள்ளிட்டவர்களை ஓரம்கட்டியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக கிரிஸ்டி நோயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.