அமெரிக்க அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் பொறுப்பு எலன் மஸ்க்-கிடம் ஒப்படைக்கப்போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் தனது வெற்றிக்காக கடும் பாடுபட்ட எலன் மஸ்க்கிற்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency – DOGE)-யை இந்திய அமெரிக்க தொழிலதிபரான விவேக் ராமசாமியுடன் இணைந்து எலன் மஸ்க் தலைமையேற்று நடத்துவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளுடன் கைகோர்த்திருக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க் புதிதாக அமையவிருக்கும் டிரம்ப் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த இது வழிவகுத்துள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகம் முழுமையாக இயங்கவில்லை என்றும் அதன் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் எலன் மஸ்க் ஏற்கனவே முழங்கி வரும் நிலையில் தற்போது DOGE-ன் தலைமைபொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருப்பது அமெரிக்க அரசுத் துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.