சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.80 ஆயிரம் அபராதமும் சென்னை போக்சோ நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டமான கடந்த 2021ம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லை மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்படி, சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும்போது பாலியல் ரீதியாக நடந்துகொண்டதாக மாணவிகள் புகார் கூறினார்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல்ரீதியாக இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது, மாணவிகளின் உடல் அமைப்பு மற்றும் அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது என பல்வேறு வழிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதும் தெரிய வந்தது. மேலும் ஆன்லைன் வகப்பின்போது, அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, மாணவிகளின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு ஆபாச தகவல்களை அனுப்புவது, செல்போனில் அநாகரிகமான முறையில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என்று தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் புகாரின் பேரில் காவல்துறையினர் ஆசிரியர் ராஜகோபாலாலனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், அவரது செல்போன், லேப்-டாப்பை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அவர், மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. ‘சைபர் கிரைம்’ போலீசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தகவலை மீட்டனர். தொடர் விசாரணையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் (354 (ஏ)), சைகை மூலம் பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல் (509), தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார். , ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, எட்டு மாணவிகளின் புகாருக்கும் தலா 2 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதுமட்டும் அல்லாது, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தால் போதுமானது. மேலும், ஒவ்வொரு மாணவியின் புகாருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.