சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக பெங்களூருக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் விரைவுச் சாலையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 106 கிலோமீட்டர் தூரமும், ஆந்திராவில் 90 கிலோ மீட்டர் தூரம், கர்நாடகாவில் 72 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 298 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த எக்ஸ்பிரஸ்-வே பணிகள் கர்நாடகாவில் நிறைவடைந்துள்ளது.

டபாஸ்பேட் முதல் ஹொசக்கோட்டை வரை சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) உடன் இந்த விரைவுச் சாலை இணைக்கப்பட்டதை அடுத்து கர்நாடகா பகுதியில் எந்தவித சிக்கலும் இன்றி இந்த பணி முழுமையாக நிறைவுபெற்றுள்ளது.

இந்தப் பகுதி இன்னும் ஒரு சில வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக இருங்காட்டுக்கோட்டையில் இருந்து வாலாஜாபேட்டை வழியாக ஆந்திராவின் குடிப்பாளா சென்றடையும் இந்த சாலையில் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த பணிகள் இன்னும் 15 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் 2025 ம் ஆண்டு துவக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17,930 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விரைவு சாலையில் செல்லும் வாகனங்கள் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் ஆந்திராவிலும் இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை 2025 ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.