மதுரை:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள இந்த காலக்கட்டத்தில்,  மதுரையில், புதிய கான்கிரிட் கால்வாய் அமைக்கும் பணியை  வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக,  மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக, சென்னையில் தண்ணீர் தேங்கிய நிலையில், அவை மின்மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டது. அதுபோல, மதுரை மாவட்டத்தில் கனத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்சியாளர்கள்மீது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக முறையாக மழைநீர் வடிகால், ஏரி குளங்கள் தூர் வாரப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது- இதைத்தொடர்ந்து சென்னை, மதுரை என பல பகுதிகளில் தூர் வாரும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள செல்லூர் கண்மாய், கான்கிரிட் கால்வாயாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வரும் இந்த காலக்கட்டத்தில் அமைச்சர் மூர்த்தி புதிய கான்கிரிட்காவல்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

செல்லூர் கண்மாயின் மூடிய கால்வாய் திட்டத்துக்கு அக்.30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கினார்.  இதைத்தொடர்ந்து, தற்போது அதற்கானி பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, செல்லுார் கண்மாய் வலது புற கரையிலிருந்து வைகை ஆறு வரை ரூ.15 கோடி மதிப்பில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.   கண்மாயின் தலை மதகு மூலம் 1090 கனஅடி நீரை வெளியேற்ற 290 மீ. நீளத்துக்கு மூடிய கால்வாயாக கட்டப்படுகிறது.

இந்த பணிகளை 2 மாதங்களில் இ முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், கால்வாய் அமைக்கப்பட்ட பின்பு கூடுதலான தண்ணீர் செல்லூர் கண்மாயிலிருந்து ஆற்றுக்கு நேரடியாக கொண்டு செல்வதால் செல்லூர் மக்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில்,  தற்போது கான்கிரிட் கால் வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்கள் விவசாயிகள் இடையே அதிருப்தியை எற்படுத்தி உள்ளது.