உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வின் போது அங்கு கடைகள் அமைக்க இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

அகாரா பரிஷத் என்ற அமைப்பு விடுத்திருக்கும் இந்த கோரிக்கையில் ஜூஸ் கடைகள், கேட்டரிங் கடைகள், தாபாக்கள் போன்றவற்றை சனாதனிகள் அல்லாதவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து சாதுக்கள் மற்றும் துறவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்பதால் இந்து ஆசார முறைப்படி தயாரிக்கப்பட்டு வழங்கப்படாத உணவுக் கடைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் உணவுக் கடைகளை சனாதனிகளுக்கு மட்டும் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்படும் உணவில் பிற மதத்தினர், குறிப்பாக முஸ்லிம்கள், எச்சில் துப்புவதன் மூலம் இந்துக்களின் உணவை அசுத்தப்படுத்த முயல்வதாகக் கூறி அதை “தூக்-ஜிஹாத்” என்று குறிப்பிட்டுள்ள இந்து அமைப்புகள் மகா கும்பமேளாவில் முஸ்லிம்களுக்கு கடைகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்த மகா கும்பமேளா நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து கங்கையில் புனித நீராடுவார்கள் என்பதால் இதற்கான தீவிர ஏற்பாடுகளை உ.பி. அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் டெண்டர் முறையில் மட்டுமே கடைகள் ஒதுக்கப்படும் என அம்மாநில நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பம் மற்றும் மகா கும்பமேளாக்களில், எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் கடைகளை ஒதுக்குவதில் எந்த தடையும் இல்லாத டெண்டர் செயல்முறையை மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.