ஆந்திர மாநிலம் விஜயவாடா – ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
நந்தியால் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சாமி கோயிலை மேம்படுத்தும் விதத்தில் ஸ்ரீசைலத்துக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் கடல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையிலிருந்து புறப்பட்ட கடல் விமானம், வானில் பறந்து ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தை சென்றடைந்தது.
நீரில் இருந்து புறப்பட்டு நீரில் தரையிறங்கும் இந்த 150 கி.மீ. தூர சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜயவாடாவில் இருந்து சுமார் 40 நிமிட பயணத்தில் ஸ்ரீசைலம் சென்றடையும் வானிலும் நீரிலும் செல்லக்கூடிய இந்த விமானத்தில் 14 பேர் வரை பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை இன்று சோதனையிடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துவைப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கான பயண கட்டணம் உள்ளிட்டவற்றை ஆந்திர சுற்றுலாத் துறை இறுதி செய்தபின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் கடல் விமான சேவை தொடங்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேல் சிலையிலிருந்து சபர்மதி ஆற்றின் முன் பகுதி வரை இயக்கப்பட்ட இந்த சேவை குறைந்த நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
தற்போது, முழு ஏற்பாடுகளுடன் நாட்டில் இரண்டாவது முறையாக கடல் விமான சேவைகளை தொடங்க ஆந்திர சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.