உப்பில்லா பிரசாதம் அளிக்கப்[படும் ஒப்பிலியப்பன் கோவில்,
108 திவ்ய தேசங்களில் இது 13வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசம் வைகுந்தம் “தென்திருப்பதி” என அழைக்கப்படும் சிறப்புப்பெற்றது. இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார்.
அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம். இத்தலத்தில் திருக்கல்யாணம், திருமஞ்சனம், பிராத்தனை, கருட சேவை, தங்கரத உலா போன்றவைகளை நிகழ்த்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
இப்பெருமான் திருவீதிப் புறப்பாட்டின் போது தனியாக செல்வது இல்லை. தாயாருடன் சேர்ந்து செல்வார். தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது.
ஒவ்வொரு மாதமும் சிரவனத்தன்று சிரவண தீபம் எடுத்து வலம் வரும் பொழுது பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாளுக்கு உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கு திருமணங்கள் நிறைய நடக்கின்றன.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் பிரும்மாண்ட புராணத்தில் இக்கோயிலின் வரலாறு இவ்வாறு கூறப்படுகிறது.
“மிருகண்ட மகரிஷியின் புதல்வர் மார்க்கண்டேயர்” இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் செய்யும்போது, துளசி செடியின் கீழே சிறு குழந்தையாய் ஸ்ரீ மகாலக்ஷ்மியை கண்ட மார்க்கண்டேயர் குழந்தையை எடுத்து வளர்க்க, பின்பு ஸ்ரீ மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயோதிக பிராமண வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திருவோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டார்.
மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் லவணம் (உப்பு) சேர்க்க மறந்துவிட்டால் நீரோ கோபம் கொள்வீர் என தயங்க…வயோதிக பிராமண வடிவில் வந்த பெருமாள் உம்பெண் உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகாவிஷ்ணு என பின்பு அறிந்து மார்க்கண்டேயர் பெருமாளுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துகொடுத்த தலம் ஆகும்.
பெருமாள் வாக்குக்கிணங்க இன்றும் இந்த சன்னதி பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்பதால் ”லவண வர்ஜித வேங்கடேசன்” (லவணத்தினை – உப்பினை விலக்கிய) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் – உப்பில்லா அப்பன் – உப்பிலியப்பன் என்று அழைக்கிறோம்.
108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் கொடுக்கப்படுகிறது