அமெரிக்கா – ரஷ்யா உடனான உறவு, மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல், மற்றும் தங்கத்தின் நிலைத்தன்மை ஆகியவை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை நம்பி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காமல் சுமூகமாக தீர்வு கண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
அதேவேளையில், ஈரான் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
மறுபுறம் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவான அதிபர் ஜோ பைடனின் முடிவுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார்.
தவிர, மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாதவராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக கருதப்படும் தங்கம் விலை போர் சூழல் காரணமாக உலகளாவிய நிலையில் தினந்தோறும் பலமடங்கு உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை இந்த நிலையற்ற தன்மையால் வாங்கும் சக்தி குறைந்து வணிகம் பெருமளவு பாதிக்கும் அபாயம் உள்ளதாக தங்க வணிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
பிராந்திய மற்றும் பொருளாதார நிலை தன்மைக்கு அமெரிக்க அதிபர் தேர்தலும் ஒரு அளவுகோலாக பார்க்கப்படுகிறது
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு இதில் யார் வெற்றி பெற்றாலும் உலகளாவிய இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியைப் பொறுத்தே புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிலை தன்மை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
அதேவேளையில், கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதை அடுத்து இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்தது போல் ஒரே நாளில் முடிவாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் உலகளவில் மேலும் சில நாள் இந்த மந்த நிலை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.