திருவண்ணாமலை: 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை மகா தீப திருநாளையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலை தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையாரை தரிசிக்க சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அறநிலையத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் போது வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 10-ஆம் தேதி தேரோட்டம்,
டிசம்பர் 13-ஆம் தேதி பரணி தீபமும் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த தீபத் திருவிழாவிற்கு சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்தல் குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், கோயில் உள்ளே பரணி தீபத்தை பார்க்க 7,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்;
அதேபோல், மகா தீபத்திற்கு 11,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை உச்சியில் உள்ள மகாதீபத்தை தரிசிக்க 2,000 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதிக்கப்படும் என்றும் அனுமதி சீட்டுகள் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோயிலின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்; மூன்று மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும். மொத்தம் 85 மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் சுவாமி திருத்தேர் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மகாதீபம்
சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர்.
பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள்.
இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.
முன்னதாக, மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.