சென்னை : தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணை வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, கடற்கரையோரத்தில் விரைவான வளர்ச்சி மற்றும் நமது நகரத்தில் அதிகரித்து வரும் மாசு அளவுகள், கடலில் கழக்கு மாசுக்களால், நமது சுற்றுச்சூழலை கடுமையாக சீர்குலைத்து வருகின்றன, இதனால் கடல் ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாசுபட்ட கடற்கரை காரணமாக தாய் ஆமைகள் முட்டையிட சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், முட்டைகள் உயிர்வாழும் என்ற நம்பிக்கையின்றி தண்ணீரிலேயே முட்டையிடும் நிகழ்வுகள் உள்ளன. இதனால், கடல்உயிரினத்தை பாதுகாக்கும் வகையில், ஆமைகள் முட்டையிடுவதை பாதுகாக்க மத்திய மாநிலஅரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரச அரசாணை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகள், ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி பாதுகாக்கப்படும் என அப்போதைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “தமிழ்நாட்டின் கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி (சிற்றாமைகள்) மற்றும் பச்சை ஆமைகள் வருகை தருகின்றன.ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் உள்ளூர் மீனவ தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆமை பாதுகாவலர் குழுக்கள் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பதற்கும், ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்ப உதவும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவர். ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாவலர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.