அமரன் படம் தொடர்ந்து 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அமரன்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ஜெயம் ரவி நடித்த பிரதர், மற்றும் கவின் நடித்த ப்ளடி பெக்கர் ஆகிய படங்களுடன் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்த இந்த படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனை படைத்து வந்தது.
தொடர்ந்து நான்கு நாட்களாக சராசரியாக 25 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் குமார் வரிசையில் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஏற்கனவே இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாயை வசூல் செய்த போதும் அமரன் இந்த சாதனையை 4 நாட்களில் நிகழ்த்தியது சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்திய அளவில் 85 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் சர்வதேச அளவில் மொத்தம் ரூ. 100 கோடி வசூலித்து இந்திய அளவில் வெளியான மற்ற மொழி படங்களையும் வசூலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.