சென்னை:  விஷவாயு கசிவு காரணமாக,  இரண்டு வார விடுமுறைக்கு பிறகு இன்று (நவ.,04) திறக்கப்பட்ட திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில்,  இன்று மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் மாணவிகள் 3 பேர் மயங்கமடைந்த நிலையில்,  இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர்களில் 2 பேரும் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்த பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வாக்கவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில்  விக்டரி மெட்ரிகுலேசன் என்ற பெயரில் கிறிஸ்தவ நிர்வாகத்தின் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் ( அக்.,25ம் தேதி)  திடீரென விஷவாயு கசிந்தது. இதனால் சுமார் 35க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர்.  மேலும் சிலர் வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு ஆனார்கள். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டவீடு திரும்பினர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த விஷவாயு கசிவு தொடர்பாக, காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கல்வித்துறையினர், மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியதுடன், அருகே உள்ள தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து விஷவாயு எங்கிருந்து வெளியேறியது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு  இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று பள்ளி திறக்கப்பட்டு வகுப்பறையில் மாணவ மாணவிகள் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென சில மாணவகிள் மயக்கம் அடைந்தனர்.  முதலில் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்த நிலையில், பின்னர் மேலும் சிலர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சில பெற்றோர்கள் உடனே பள்ளிக்குள் வந்த நிலையில், அவர்களில் சிலரும் மயங்கி விழுந்ததாகவும் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து வகுப்பறையில் இருந்து மாணவ மாணவிகள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறத. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த  வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அவருக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும்,பெற்றோர்களும் திரண்டதபால் அங்கு பரபரப்பு ஏற்பட்டள்ளது. போலீசார் பெற்றோர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர். இதையடுத்து பள்ளி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.