ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை
பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக ஒருவர் வசித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் கோயிலுக்கு செல்ல எண்ணிய போது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறிக் கோயிலுக்கு சென்றார். வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, “இனி என்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன்; என்னை இங்கேயே வழிபடு” என்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென வரலாறு கூறுகிறது.
கோயிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு இலிங்கம் தனி சன்னதியில் உள்ளது. இவரது கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்கு, சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இதே சிலையின் பின்புறத்தில் மயில்வாகனத்துடன் நின்றகோலத்தில் முருகன் இருக்கிறார். அண்ணனும், தம்பியும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் இக்கோலத்தில் இருப்பது அபூர்வம்.
அம்மன் சன்னதி முன்புறம் நவக்கிரக மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர் அம்பாளின் நேரடிப்பார்வையில் உள்ளதால், உக்கிரம் குறைந்து காட்சியளிக்கிறார். தோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமையில் இவரை வழிபட்டால் தோசம் நீங்கும் என்பது ஐதீகம்.
சிவன் சன்னதிக்கு முன்வலப்புறத்தில் தூணில் சிவ ஆஞ்சநேயர் இருக்கிறார். இவருக்கு வெள்ளிநிறத்திலான ஜரிகை பூசி, துளசி மாலை சாத்தி வணங்கினால் நாம் கண்ட நற்கனவுகள் பலிக்கும், தீய கனவுகளாக இருந்தால் அவை நம்மை அண்டாமல் விலகிஓடும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, இவரை “கனவு ஆஞ்சநேயர்‘ என்றும் அழைக்கிறார்கள். பிரகாரத்திலும் ஒரு ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடி உள்ளார்.
இங்குள்ள விநாயகர் வன்னிமரவிநாயகர். திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.\
திருவிழா:
பங்குனியில் 18 நாள் பிரம்மோற்ஸவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம்.
வேண்டுகோள்:
திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருக்கவும், சனி தோஷம் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர்.
சனிதோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்னை இருந்தால், கனிகள் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், பிரச்னைகள் தீருவதாக நம்பிக்கை