மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிவசேனா பெண் வேட்பாளர் ஷைனா என்சியை ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது இண்டி கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் முடிவடைந்து, கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடும் ஏற்பட்டு வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். இதற்கிடையில், காங்கிரஸ் உள்பட பல கட்சிகளில், வேட்பாளர்களுக்கு எதிராக கட்சியினரே அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதனால், பல தொகுதிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோல மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் 85-85-95 என தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் 16 தொகுதிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவும் இல்லை. சமாஜ்வாதி கட்சியும் சில தொகுதிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது
பாஜகவைப் பொறுத்தவரை 150 தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்பட்டது. தற்போது வரை 146 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 4 இடங்களை சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியாளரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட சிலருக்கு அதன் கூட்டணிக் கட்சியான ஏக்நாத் ஷிண்டே சிவசேனா வாய்ப்பு கொடுத்து வேட்பாளர்களாகவும் அறிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகன் நிலேஷ் ரானே, மாஜி எம்பி ராஜேந்திர காவித், மாஜி எம்எல்ஏ விலாஸ் தானே ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்திருக்கின்றனர்.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 65 தொகுதிகளில் போட்டியிடும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஷிண்டே சிவசேனா மொத்தம் 80 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 49 தொகுதிகளுக்குதான் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
“சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்.. 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக ” காங்கிரஸ் கட்சி மொத்தம் 103 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே சிவசேனா 87 தொகுதிகளுக்கும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 82 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மொத்தம் 288 தொகுதிகளில் 272 தொகுதிகளை இந்த கூட்டணி வேட்பாளர்களை அறிவித்த நிலையில் 16 தொகுதிகள் குறித்து குழப்பம் நிலவுகிறது.
பாஜகவும் காங்கிரஸும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த முயற்சித்தாலும், உத்தவ் தாக்கரே மற்றும் ஷரத் பவார் அணிகளுக்கு எதிராக சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் களமிறங்கி உள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், பிஜேபியில் இருந்த பெண் தலைவரும் ஆடை வடிவமைப்பாளருமான ஷைனா என்சி, என்பவர், வொர்லி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக போட்டியிட ஆர்வம் காட்டி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்து மும்பாதேவி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பாதேவி தொகுதியில், மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அமீன் படேலுக்கு எதிராக ஷைனா என்சி போட்டியிடுகிறார்.
இது தாக்கரே தலைமையிலான சிவசேனா வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
(சைனா என்சி ஜெயண்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் மன்சிங் சுடாசமாவின் பேத்தியான முன்னாள் மும்பை ஷெரிப் நானா சுடாசமாவின் மகள். இவரது கணவர் தொழிலதிபர் மணீஷ் முனோட்.)
இதைத்தொடர்ந்து, உத்தவ் தாக்கரே ஆதரவு முன்னாள் எம்.பி.யான ரவிந்த் சாவந்த்,. சிவசேனாவின் போட்டியாளரும் ஆடை வடிவமைப்பாளருமான ஷைனா என்சியை “இறக்குமதி செய்யப்பட்ட மால்” (உருப்படி) என்று கடுமையாக விமர்சனம் செய்தார். “அவள் நிலையைப் பார். வாழ்நாள் முழுவதும் பாஜகவில் இருந்த அவர் தற்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். இதுபோன்ற ‘இம்போர்ட்டட் மால்’ ஏக்நாத் ஷிண்டேவின் கட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது வேட்பாளராகவும் மாறிவிட்டார் இறக்குமதி செய்யப்பட்ட ‘மால்’ இங்கு வேலை செய்யாது, ஒரிஜினல் ‘மால்’ மட்டுமே இங்கு வேலை செய்கிறது… அதுவும் எங்களிடம் உள்ளது,” என்று சாவந்த் கூறினார். “இவருக்காகத்தான் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நாங்கள் பிரச்சாரம் செய்திருந்தோமோ என்றும் விமர்சித்து உள்ளார்.
பெண் வேட்பாளரை இம்போர்டட் மால் ஆபாசமாகத் விமர்சனம் செய்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக வேட்பாளர் ஷைனா என்.சி நாக்பாடா காவல் நிலையத்தில், தன்னை எம்.பி அரவிந்த் சாவாந்த் ‘இம்போர்ட்டட் மால்’ எனக் குறிப்பிட்டு, அவமதித்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
சாவந்த் விமர்சனத்தக்கு பதில் கூறிய ஷைனா என்சி “மஹிலா ஹூன், மால் நஹி” ( நான் உங்கள் மால் அல்ல:) என்று பதிலளித்தார். போட்டியாளரான உத்தவ் சேனா எம்.பி.யின் பாலியல் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மால் (உருப்படி – கிராக்கி) என கூறியது, பாலியல் தொடர்பான விமர்சனம் என்று அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சாவந்த் கட்சியிருக்கு பெண்கள் மால் ஆகத்தான் தெரிகிறார்களா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சாவந்த்தின் கடுமையான விமர்சனங்கள், மகளிர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை (யுபிடி) தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த பாஜக, சிவசேனா கட்சிகளின் பெண்கள் அமைப்பு கடுமையாக விமர்சித்து போராட்டங்களையும் நடத்தி வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், ஒரு பெண்ணை ‘மால்’ (உருப்படி) என்று அழைக்கும் போது அவருடைய சிந்தனையைப் பாருங்கள் என கடுமையாக விமர்சித்ததுடன், இதே நிலையில்தான் அவர் பெண் வாக்காளர்களையும் நினைப்பார் என விமர்சிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிவசேனா மகளிர் பிரிவு ஊழியர்கள் நாக்பாடா காவல் நிலையத்தில் சாவந்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மகாராஷ்டிர சட்ட மேலவையின் துணைத் தலைவர் டாக்டர் நீலம் கோர்ஹே, சாவந்தின் கருத்துகளை அறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாவந்தின் கருத்துக்காக மஹா யுதி நிர்வாகம் அவரை கடுமையாக சாடியுள்ளது. “பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துகளுக்கு நமது சமூகத்தில் இடமில்லை, குறிப்பாக மகாராஷ்டிராவில், நாங்கள் பெருமையுடன் கொண்டாடுகிறோம், எங்கள் லட்கி பஹின்களை மதிக்கிறோம். எங்கள் ஊக்கமளிக்கும் பெண்களின் சின்னங்களைக் கொண்டாடுகிறோம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அவர்களின் பங்களிப்பை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி, அங்கீகரித்து வருகிறோம், ”என்று துணை முதல்வர் அஜித் பவார் கூறினார்.
சாவந்தின் விமர்சனத்துக்கு பதிலளித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “பாலாசாகேப் (தாக்கரே) உயிருடன் இருந்திருந்தால், அவரது முகத்தை அடித்து நொறுக்கியிருப்பார்” என்றார்.
சிவசேனா மகளிர் பிரிவு நாக்பாடா காவல் நிலையத்திற்கு வெளியே மாபெரும் போராட்டத்தை நடத்தியதை அடுத்து, மும்பை காவல்துறை சாவந்த் மீது BNS இன் பிரிவு 79 மற்றும் பிரிவு 356 (2) இன் கீழ் சாவந்த் FIR பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தை பாஜக கூட்டணி கட்சிகள் பொதுமக்களிடம் எடுத்துச்சென்றுள்ளதால், அங்கு உத்தவ் தாக்கரே அணியினருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது கருத்துக்கான விளக்கத்தை அரவிந்த் சாவந்த் தெரிவித்துள்ளார். “ஷைனா என்சி இப்போது ஒரு கதையை அமைக்க விரும்புகிறார். நான் சொன்னதை முழுமையாகக் காட்ட வேண்டும் என்றவர், தனது 55 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் பெண்களை விமர்சிக்கவில்லை. ஒரு பெண்ணின் அடக்கத்தை நான் எப்போதும் மதிக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் ண்களை இழிவுபடுத்துவது இல்லை என கூறிய அரவிந்த் சாவந்த், மும்பாதேவியின் பாஜக வேட்பாளர் (ஷைனா என்சி) வெளியில் இருந்து வந்தவர் என்றும் அவர் பாஜகவில் இருந்து வந்தவர் என்பதால் அவ்வாறு கூறியதாகவும், இது எப்படி பெண்களை இழிவுபடுத்துவது என்றும் கேள்வி எழுப்பியதுடன், ‘பஹர் கா மால் ஹை தோ பஹர் கா மால் ஹை’ என்றும் கூறினார். மற்றவர்களை மதிப்பிடும்போது வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்றும் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் “சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பற்றி என்ன சொன்னீர்கள்?,” என்று கேட்டதற்கு, மழுப்பலாக பதில் கூறியவர், “வெளியில் இருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால், வெளியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்கத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.