உக்ரைன் மீதான போரை அடுத்து ரஷ்யாவில் கடையை சாத்திய கூகுள் நிறுவனத்திற்கு உலகின் மொத்த செல்வத்தை விட கூடுதலான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அங்கமான யூ-டியூப் சமூக ஊடகத்தில் ரஷ்ய ஆதரவு சேனல்களை தடை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து ரஷ்ய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை அடுத்து பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று.
ரஷ்யாவில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணிதத்தில் 1 க்குப் பின் 100 பூஜ்ஜியத்தை ‘googol’ என்று அழைக்கப்படுவதை மையப்படுத்தி தங்கள் தேடு பொரிக்கு Google என்று பெயர் வைத்த கூகுள் நிறுவனம் தற்போது 2க்குப் பின் 34 பூஜ்ஜியம் கொண்ட ஒரு தொகையை ரஷ்ய நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளதால் பொரியில் அகப்பட்டது போல் விழிபிதுங்கியுள்ளது.
உலகின் மொத்த செலவத்தின் மதிப்பு 477 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் உலகின் மொத்த உற்பத்தி 105 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகில் இல்லாத பணத்தை கூகுள் நிறுவனம் மீது ரஷ்ய நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் இதை ரஷ்யா எப்படி வசூலிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுப்பப்பட்டுள்ளது.