தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பஞ்சாரா ஹில்ஸ் சிங்கடா குண்டாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடந்த அக்டோபர் 25ம் தேதி மோமோ வாங்கிய ரேஷ்மா பேகம் (31), என்பவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மகள்களுடன் சாப்பிட்டுள்ளார்.
இதை சாப்பிட்டச் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு நாள் கழித்து மரணமடைந்தார்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இதனை விசாரித்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் மோமோ வாங்கி சாப்பிட்ட பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மோமோ விற்பனையாளர்கள் ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் மோமோஸ் தயாரிக்கும் 110 உணவுக் கடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், 69 மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
தவிர, பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் சாஸ் தொடர்பான புகார்கள் அதிகரித்ததை அடுத்து அக்டோபர் 30 முதல் மாநில முழுவதும் மயோனைஸ் பயன்பாட்டுக்கு தடை விதித்து தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.