சென்னை: தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான, முத்திரைத்தாள் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண செட்டில்மென்ட், வாடகை ஒப்பந்தம் போன்றவற்றுகளுக்காக  வாங்கப்பட்டு வந்த ரூ.20 மூத்திரைத்தாள் கட்டணம், இனி செல்லாது. குறைந்த பட்சம் ரூ.200 கொண்ட முத்திரைத்தாள் மட்டுமே செல்லுபடியாகும்.  வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்து வகையான வரிகளும், பதிவு கட்டணங்களும்  உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, மின் கட்டணம் உயர்வு, பதிவுத்துறை கட்டணம் என என பெரும்பாலான வரிகள், கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. அதுபோல, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம், லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  என உயர்த்தி தமிழக அரசு கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும், ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என்பது ரூ.10 ஆயிரமாகவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என்பது ரூ.40 ஆயிரம் என்றும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என்பது ரூ.1000 என்றும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என்பதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் என்றும் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றி அமைத்திருந்தது. தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும்,  தனியார்  கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமானது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம்  மீண்டும்  உயர்த்தப்பட்டுள்ளது.,. இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இனிமேல் 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது என்பதால், அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

இதேபோலவே பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது. இதையடுத்து, பத்திரப் பதிவு முத்திரைத் தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த துவங்கியிருக்கின்றன..