அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கதாக மாறியுள்ளதை அடுத்து முடிந்தவரை அதிக வாக்குகளைப் பெற இரண்டு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், வட கரோலினா மாகாண வாக்காளர்களை தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்ய அனுப்பிய பதிவில் இந்தியர் ஒருவரின் எக்ஸ் கணக்கை குறிப்பிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க தேர்தல் விதிகளின்படி தேர்தல் நாளன்று அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்குச் சாவடி சென்று வாக்களிக்கும்போதும், பலர் தபால் வாக்குகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதுண்டு.

தவிர, தேர்தல் துவங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்தே வாக்குப்பதிவு செய்யவும் அனுமதிக்கப்படுவதுண்டு.

இதில் ‘ஆப்செண்ட்டி வாக்கு’ எனப்படும் வாக்குச்சாவடிக்கு வராமல் வேறு வகைகளில் வாக்களிக்க விரும்புபவர்கள் அதற்காக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அந்த வகையில் வட கரோலினா மாகாணத்தில் ‘ஆப்செண்ட்டி வாக்கு’ பதிவு செய்ய கடைசி நாள் என்பதால் அதை நினைவுபடுத்த அம்மாகாண வாக்காளர்களை பதிவு செய்ய நினைவூட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் டொனால்ட் டிரம்ப்.

அதில் டெண்டுல்கர் என்ற எக்ஸ் கணக்கு உள்ள ஒருவரை குறிப்பிட்டிருந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள டெண்டுல்கர், “நான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியைச் சேர்ந்தவன்” என்று பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலானது.