சென்னை: தீபாவளி முன்னிட்டு விமான கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டு உள்ளது. வழக்கமான கட்டணங்களை விட 5 மடங்கு கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு குறைந்தது 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் விடுமுறைகளை அறிவித்து உள்ளன. இதனால், ரயில், பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், தற்போது, பலர் விமானத்தில் பயணிக்க எண்ணி விமான டிக்கெட் முன்பதிவு செய்ய முன்வந்த நிலையில், அதில் காணப்படும் கட்டணம் தலைசுற்ற வைக்கிறது.
ஏற்கனவே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட தயாராகும் மக்கள் , இன்று விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாரான நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள விமான கட்டணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கட்டணங்கள் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயர்த்தப்பட்ட இன்றைய கட்டண விவரங்கள்: (வழக்கமான கட்டணம் அடைப்புக் குறிக்குள்)
சென்னை – திருச்சி – ரூ. 8,211 முதல் ரூ.10,556 (ரூ.2382)
சென்னை – மதுரை – ரூ.11,745 முதல் ரூ.17,749(ரூ.4,300)
சென்னை – தூத்துக்குடி – ரூ.8,976 முதல் ரூ. 13317 (ரூ. 4,109)
சென்னை – கோவை – ரூ. 7,872 முதல் ரூ. 13,428(ரூ.3,474)
சென்னை – சேலம் – ரூ. 8,353 முதல் ரூ.10,867 (ரூ.3,300)
சென்னை – புதுடில்லி – ரூ.5,802 முதல் ரூ.6,877(ரூ.5,475 )
இதுமட்டுமின்றி, திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, கோல்கட்டா உள்பட வட மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கான விமான கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன.