விழுப்புரம்:  விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நாளை நடிகர் விஜயின் – தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடல் அதகளப்பட்டு வருகிறது.  மாநாட்டு திட்டல் முழுவதும் ஹைக் சிட்டியாக மாறி உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் சாரை சாரையாக வந்து மாநாட்டு திடலை கண்டு ரசித்து வருகின்றனர். மாநாட்டை ஒட்டி, அந்த பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு  நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. மேலும்  மாநாட்டுக்கு இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், கட்சித் தொண்டர்கள் என 2 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர்.

இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார். அதற்காக வெள்ளிக்கிழமை பகல் 12:30 மணி அளவில் மாநாட்டு முகப்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான இடம் 225 சதுர அடியை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, அதில் 100 அடி உயர கொடிக் கம்பம் நடப்பட்டது. தவெக மாநாட்டு மேடையில் இருந்து நடுவே அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து வந்து கட்சிக் கொடியை நடிகர் விஜய் ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார்.

மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் அப்டேட் செய்யும் வகையில்,  மாநாட்டின் மேடை அருகே இணையதள வசதிக்காக தனியார் கம்பெனியின் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாநாடு ஏற்பாட்டின் இறுதிக்கட்ட பணிகளாக மாற்றுத் திறனாளிகள் அமர தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டு நிகழ்வுகளை பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் 600 பெரிய எல்இடி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.

அதுபோல, தமிழக அரசியல் வரலாற்றில்,  முதல் முறையாக தமிழ் வரலாற்றுத் தலைவர்கள், சேர, சோழ, பாண்டியர், தமிழன்னை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது

மேலும், விடுதலைப்போராட்ட வீரர்களான,   வீரன் அழகுமுத்துக்கோன், வேலுநாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், மற்றும் ஒண்டிவீரன் ஆகிய 10 தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன்,  பெரியார், காமராஜர், அம்பேத்கர், மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல அரசியல் கட்சிகள் மாநாடுகளை நடத்திய நிலையில், அந்தந்த கட்சியின் தலைவர்களின் கட்டவுட்டுக்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், முதன்முறையாக விஜய் தனது மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் மூதாதையார்களான அரசிகர்கள், மற்றும் தமிழகர்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் என பலரையும் நினைவுகூர்ந்து கட்அவுட் வைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

மாநாட்டு திடலில் காவல் துறை அளிக்கும் பாதுகாப்புடன் 150-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் படை, துபாயில் இருந்து 1000 பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். பவுன்சர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி உள்ளார்.  மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் . திரை பிரபலங்கள் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டு திடலில் கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,,  மாநாட்டில் வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்க சமையல் கலைஞர்கள் குழுவினர்கள் வி.சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிக்காக ஒருநாள் முன்னதாகவே தாங்கள் ஏற்கெனவே புக் செய்த ஓட்டல் அறைகளில் வந்து தங்க ஆரம்பித்தனர்.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் கவனமாக வர வேண்டும் என நடிகர் விஜய் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார்.  அதில் மாநாட்டு  திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள் மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம்” என்று விஜய் கூறியுள்ளார்.

பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்திற்கு போலீசார் ஜீப்கள், பஸ்கள் மூலம் வரத்தொடங்கி உள்ளனர்.

இதனிடைய, விக்கிரவாண்டி அடுத்த சித்தணி தனியார் கல்லூரியில், மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்பி தீபக் ஸ்வாட்ச் உயர் மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, தனியார் பேருந்துகளை மட்டும் திண்டிவனம் – விழுப்புரம் சாலையில் அனுமதிப்பது என்றும், வேன், கார்கள், ஆம்னி பஸ்கள் கூட்டேரிப்பட்டு, திருக்கனுர் வழியாக முண்டியம்பாக்கத்தில் இணையும்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களான லாரிகள், ட்ராஸ் லாரிகள் திண்டிவனம் – புதுச்சேரி வழியாக கடலூர் சென்று அங்கிருந்து பண்ருட்டி உளுந்தூர்பேட்டை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லவும் , சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், விழுப்புரத்திலிருந்து – திண்டிவனம் செல்லும் சாலையை தவெக தொண்டர்கள் வரும் வாகனங்களை மட்டும் அனுமதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு செல்பவர்கள் விழுப்புரம் – செஞ்சி வழியாக திண்டிவனம் சென்று சென்னை செல்லும் வகையில் மாநாடு நாளன்று மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 27-ம் தேதி சென்னையிலிருந்து திண்டிவனத்தை கடந்து விழுப்புரம் வழியாக செல்வதையும், தென் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு செல்வதை தவிர்ப்பது உகந்ததாக இருக்கும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் மாநாட்டில் கலந்துகொள்ள சுமார் 3 லட்சம்பேர் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. , தவெக அதன்படி, 150 மருத்துவர்கள், 150 உதவி மருத்துவ டெக்னீஷன்கள் என 300 பேர் கலந்து கொள்கின்றனர். மேலும், தனியார் ஆம்புலன்சுகள் பயன்படுத்த உள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அரசு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு பார்க்கிங்குக்கும் ஒவ்வொரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் எனவும் அதில் ஒரு மருத்துவ குழு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, மாநாட்டு திடல் முன்பு இரண்டு மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. மயக்கம் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தேவைபட்டால் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மேல் சிகிச்சை தேவைபட்டால் ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.