சென்னை; வெள்ளத்தில் மிதக்கும் மதுரையில் துரிதகதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
மதுரையில் நேற்று (அக். 25) வரலாறு காணத அளவில் மழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதைப் போல குறுகிய நேரத்தில் அதிக அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன, மதுரையில் மாசிவீதி, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற பல இடங்களில் கனமழை மழை பெய்தது. சுமார்ல் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மதுரையில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 செ.மீ மழைப் பதிவு. ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் கடும் பாதிப்பு. செல்லூரில் 50 அடி சாலை, கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை
இதனால், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பள்ளி கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் கூட கடும் இன்னலுக்கு ஆளாகினர். கிடாரிப்பட்டி பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சர்வேயர் காலனிபாரத் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவும் சுமார் ஒருமணி நேரம் பெய்த மழையின் காரணமாக தேங்கிய மழைநீரே பல இடங்களில் இன்னும் முழுமையாக வெளியேறாத சூழலில், இன்று பிற்பகல் பெய்த மழை மேலும் சிக்கலுக்கு வழிவகுத்தது. மழை நீரை அகற்றுவதில் மாநகராட்சியும், மாநில அரசும் மெத்தனம் காட்டி வருவதாக, மதுரை எம்.பி. வெங்கடேசன் குறை கூறியிருந்தார்.
பொதுமக்களும் மதுரை மாநகராட்சி மற்றும் அரசுமீது குற்றம் சுமத்தி வருகின்றனர். “பலமுறை மழைநீர் தேங்குவது தொடர்பாக அரசிடம் தெரிவித்துவிட்டோம். வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுவிட்டது. பாம்பு, பூரான் போன்றவைகளும் இருக்கின்றன. குழந்தைகளை வைத்துக்கொண்டுதான் வாழ்கிறோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
மதுரையில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார்.