மதுரை: கோவில்களில் ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா?  சுவாமி தரிசனத்துக்கு என் கட்டணம் வசூலிக்கிறிர்கள என  மதுரை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய கோவில்கள் அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களுக்கு உள்ள நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம், மற்றும்  பக்தர்கள் உண்டியலில் போடும் காணிக்கைகளை அரசு கையப்படுத்தி வருகிறது. இந்த  வருமானங்கள் மூலம் அறநிலையத்துறை, கோவிலுக்கான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில், அறநிலையத்துறை  பல்வேறு செலவுகளுக்கு  கோவில் பணத்தை செலவழித்து வருகிறது. மேலும்,  பிரபல கோவில்களில் சாமானிய மக்கள் சுவாமி தரிசனம் செய்வதை தாமதப்படுத்தும் வகையில், செல்வந்தர்கள் நேரடியாகவும், விரைவாகவும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கட்டண டிக்கெட்டுகளை விற்பனை செய்து கல்லா கட்டி வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சுவாமி தரிசனத்துக்கு அறநிலையத்துறை சார்பில்  கூடுதல் கட்டணம் அறிவிக்கப்பட்டிருந்தது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில்,  இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.1000, ரூ..2000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என சரமாரியாக  கேள்வியெழுப்பியுள்ளது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.