டிஜிட்டல் பேமண்ட் பழுதானதால் 50 காசு மீது தராத போஸ்ட் ஆபிஸ்க்கு ரூ. 15,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மானுஷா, இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பொழிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதற்கு ரூ. 29.50 கட்டணம் என்று கூறப்பட்டது. ஆனால் டிஜிட்டல் பேமண்ட் பழுதாகி உள்ளதால் ரூ. 30 கொடுக்கச் சொல்லி தபால் அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.
50 பைசாவை திரும்ப கேட்ட மானசா-விடம் கணினியில் ₹30 காட்டியதாக தெரிவித்து, மீதி காசு கொடுக்க தபால் அலுவலர் மறுத்தார்.
இதனால் விரக்தியடைந்த மானசா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
தினமும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நடக்கும் அஞ்சல் துறையில் ஒவ்வொருவரிடமிருந்தும் 50 பைசா பறிப்பது பெரும் மோசடி என இந்த வழக்கு விசாரணையின் போது, மானசா வாதிட்டார்.
இதற்கு அஞ்சல் துறை தரப்பில் 50 பைசா போன்ற பைசாக்களில் வரும் கட்டணம் ரூ.1 ஆக மாறும் வகையில் தபால் துறையின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து 50 பைசா அதிகம் பெற்றதை அஞ்சல் துறை ஒப்புக்கொண்டதால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 2(47) கீழ் நியாமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி அஞ்சல் துறைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
இதில் மானசாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 10,000, வழக்கு செலவிற்கு ரூ. 5,000 மற்றும் அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டிய 50 பைசா என மொத்தம் ரூ. 15000.50பை வழங்க உத்தரவிட்டுள்ளது.