ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தரப்பில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பான சோரன், தம்பி பசந்த் சோரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை பேரவைத்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல்கட்ட தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முயற்சித்து வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற ஹேமந்த் சோரன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பணியாற்றி வருகின்றன. இதனால், பல தலைவர்கள் கட்சி மாறி வருவதும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் பாஜக தலைவர்கள் பலர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் ஜேஎம்எம் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 35 வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியிலும், அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் . ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் போட்டியிடுகின்றனர்.
ஹேமந்த் சோரன் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். அவர் 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியாளரான சைமன் மால்டோவைவிட 25,740 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி கல்பனா சோரன், காண்டே இடைத்தேர்தலில் பாஜகவின் திலீப் குமார் வர்மாவைவிட 27,149 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். ஜேஎம்எம் அறிவித்துள்ள 35 வேட்பாளர்களில், ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவிலும், ஜார்க்கண்ட் பேரவைத்தலைவர் ரவீந்திரநாத் மஹ்தோ நாலாவிலும், அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர் கர்வாவிலும், சோனு சுதிவ்யா கிரிதியிலும், பெபி தேவி தும்ரியிலும் போட்டியிட உள்ளனர்.